appliedtamil@gmail.com

இலக்கிய நூல்களில் திருக்குறள் கருத்துகள்

‘திருக்குறட் செல்வர்’ துரை.தனபாலன்
.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ்.
.
அலைகடல் கடந்தும், அருந்தமிழ் மறவா நிலையினில் நின்று, நிகரில்லாத தமிழ்ப்பெரும் பணியினைத் தகையுற ஆற்றும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சீர்மிகு சான்றோர்கள் அனைவருக்கும் எனது செந்தமிழ் வணக்கம்.
.
கருத்தாழமும், கழுகு நோக்கும், கனிச்சுவையும் ததும்பும் தனிப்பெரும் பாடல்கள் பல கொண்ட தன்னிகரில்லா இலக்கியங்கள் படைத்தது நம் தமிழ் மொழி. கடல் கோளாலும், கயவர்களின் சூழ்ச்சியாலும், அதற்குப் பலியான அப்பாவித் தமிழர்களின் அறியாமையாலும், அழிந்து போன அரும் நூல்கள் பல நூறு போக, எஞ்சியவையே ஏராளமாக இருப்பதால்தான், நம் தமிழ் மொழி வளமிகுந்த மொழியாக இன்றும் நலமிகுந்து வாழ்கிறது.
.
தொல்காப்பியம், சங்க நூல்களான எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, இவற்றுடன் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்ப இராமாயணம், வில்லி பாரதம், திருக்குற்றாலக் குறவஞ்சி, பக்தி இலக்கியங்கள், இலக்கண நூல்கள், நரி விருத்தம், புறப்பொருள் வெண்பாமாலை, ஔவையார் பாடல்கள், அருங்கலச் செப்பு, அறநெறிச்சாரம், நள வெண்பா, அல்லி அரசாணி மாலை, புராணப் பாடல்கள், மும்மணிக் கோவைகள், அந்தாதிகள், பரணிகள், பிள்ளைத் தமிழ் பாடல்கள், உலாப் பாடல்கள், தூதுப் பாடல்கள், கலம்பகப் பாடல்கள், ஏராளமான சித்தர்களின் இணையில்லாத ஞானப் பாடல்கள், மேலும், கவி காளமேகம், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, இராமச்சந்திரக் கவிராயர் என ஆயிரக்கணக்கான அருங்கவிஞர்கள் பாடிய தனிப்பாடல்கள், மகாகவி பாரதியார், பாரதிதாசன், சுரதா, கவிமணி தேசிக விநாயகம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி ஆகியோரின் பாடல்கள் என்று, அள்ள அள்ளக் குறையாத அளவில், அருந்தமிழ் இலக்கியச் செல்வம், கடல் போல் பரந்ததாக, காலகாலமாக வற்றாத ஊற்றாக விளங்குகிறது; இன்னும் தஞ்சை சரஸ்வதி மகாலில் பிரித்துப் பார்க்கப்படாமலே பல்லாயிரக்கணக்கான ஓலைச் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன! அவற்றுள் எத்தனை மாணிக்கங்களோ, எத்தனை வைரங்களோ!?
.
இவற்றில், தமிழ்த்தாய்க்குத் தன்னிகரில்லா மணிமகுடமாகத் திகழும் திருக்குறளின் கருத்துகளைத் தன்னகத்தே தாங்கி வரும் தனிச்சிறப்புடைய இலக்கியப் பாடல்கள் சிலவற்றை மட்டும் நாம் இப்போது காண்போம்.
.
உலகப் பொதுமறை என்று உலகமே உவந்து போற்றும் திருக்குறளானது, பல இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள அறநூல் ஆகும். அந்த இயல்கள் ஒவ்வொன்றும் பல அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். இவற்றில் முதல் இயலாக வருவது பாயிரம் ஆகும்; அந்தப் பாயிரத்தில் நான்காவது அதிகாரமாக வரும் அறன் வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தில் உள்ள அருமையான குறள் ஒன்றை நாம் இப்போது காண்போம்.
.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள் எண்: 36)
.
மின்னும் இளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை அறிகென்றல் பேதைமை – தன்னைத்
துணித்தானும் தூங்காது அறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு

 • அறநெறிச் சாரம்
  .
  நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
  கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
  இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
  முதுநீர் உலகிற் முழுவதும் இல்லை
 • சிலப்பதிகாரம்
  .
  கையால் பொதித்துணியே காட்டக் கயற்கண்ணாள் அதனைக் காட்டாள்
  ஐயா விளாம்பழம் என்கின்றீர் ஆங்கதற்குப் பருவமன்று என்
  செய்கோஎனச் சிறந்தாள் போலச் சிறவாக் கட்டுரையால் குறித்த எல்லாம்
  பொய்யே பொருளுரையா முன்னே கொடுத்துண்ணல் புரிமின் கண்டீர்!
 • சீவக சிந்தாமணி
  .
  இலக்கியத்தை இது போன்று ஒப்புவமை நோக்கி நாம் படிக்கும் போது, ஒரே கருத்தை எப்படியெல்லாம் எடுத்துச் சொல்லலாம், எவ்வளவு அழகாக, வேறு வடிவில் கூறலாம், எவ்வாறு முற்றிலும் வேறுபட்ட ஒரு சுவையில் கூறலாம் என்பதெல்லாம் நமக்கு புரிய வருகிறது. நம் அறிவு விரிவு அடைகிறது; நம் மனது மகிழ்ச்சி அடைகிறது.
  .
  இவை போல, உலகப் பொதுமறையின் கருத்துகளை ஒத்த கருத்து வளம் கொண்ட பாடல்கள் ஏராளமாக நம் இலக்கிய நூல்களில் உள்ளன. அவற்றை எல்லாம் நேரம் வாய்க்கும் போது நாம் ஆழ்ந்து கற்று, அதற்குத் தக நின்று, அற வாழ்வு வாழ்வோமாக!